தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர் : உண்மையிலேயே உயி ரிழந்த சோகம்!!

1467

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர்

தமிழகத்தில் இறந்ததாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் உண்மையில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ்.கோபால். இவர் வலியுடன் காதல் என்ற படத்தில் நடித்துள்ளதுடன் நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். தற்போது இவர் பூதமங்கலம் போஸ்ட் என்ற படத்தில் வட்டம் வரதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

அதில் அவர் இறப்பது போன்ற காட்சிக்காகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும், சவபெட்டியில் மாலையுடன் இருப்பது போன்ற தன்னுடைய வீடியோவையும் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

அவர் காயல்பட்டினத்தில் பானை முதல் யானை வரை கிடைக்கும் என்ற பெயரில் கடை வைத்திருந்ததால், அவருக்கு தெரிந்த பலர் ஆர்.எஸ்.கோபால் மரணம் அடைந்ததாகக் கருதி வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மாலையுடன் சென்றுள்ளனர்.

அப்போது அது நான் நடிக்கும் புது படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் என்று விளக்கமளித்த அவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் கிழித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் கோபால் இறந்ததாக காயல்பட்டினம் பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனையும் சினிமாவிற்காக ஒட்டியிருக்கலாம் என்று அப்பகுதியினர் கருதியுள்ளனர்.

ஆனால் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.கோபால் உண்மையிலேயே உயிரிழந்தது தாமதமாகவே தெரியவந்தது. அதன்பின்னர் தான் அப்பகுதி மக்கள் ஆர்.எஸ்.கோபாலுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர்.

சினிமாவுக்காக போலியாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அடுத்த சில நாட்களிலேயே ஆர்.எஸ். கோபால் உண்மையிலேயே இறந்திருப்பது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது