நவ ரசங்களை தன் நடிப்பில் நிரூபித்த கார்த்திக்..!

514

கார்த்திக்…

சினிமாத் துறைக்குள் நுழைகையில் ஏற்கனவே முரளி என்று ஒரு நடிகர் இருக்கிறார். அதனால் பெயர் மாற்றம் நிகழ்கிறது. கார்த்திக் என்ற பெயரில் “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த அறிமுக நாயகன் விருதை பெற்ற கார்த்திக் அடுத்தடுத்து பல படங்கள் நடித்தார். ஒரு சில சருக்கல்கள் இருந்தாலும் மிக குறைந்த நாட்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து நடிப்பின் பயணத்தில் வெற்றி நடை போட்டார்,

ஒரு கட்டத்தில் “நவரச நாயகன்” என்ற பட்டத்தோடு கார்த்திக் தன்னை நிரூபிக்க ஆரம்பிக்கிறார். தனக்கென்று ஒரு ஸ்டைல்… தனக்கென்று ஒரு சார்மிங்… தனக்கென்று ஒரு பாவனை… நடை….. ஓட்டம்.. சிரிப்பு…. அழுகை.. கண் சிமிட்டல்.. சோகம்.. கோபம் என்று நவரசங்கள் அவர் உடல் மொழியில் நாட்டியமாடத் தொடங்கியது.

1993 ஆண்டு வெளியான பொன்னுமணி படத்தில், மாமா இறந்த பிறகு புத்தி ஸ்வாதீனமில்லாத மாமா பெண்ணை வைத்துக் கொண்டு “பொன்னுமணி” அழுது தீர்த்ததெல்லாம் சாகாவரம் பெற்ற திரை வெடிப்பு.

நடிப்பு ராட்சசன் என்றே சொல்லலாம்…. “கிழக்கு வாசல்” படத்தில் அம்மா சாவுக்கு நியாயம் கேட்கச் சென்று, என்னதான் தப்பு செய்திருந்தாலும் செய்தவர் ஊர்ப் பெரியவர் எனும்போது சட்டையைப் பிடிக்க வேண்டும்….. ஆனாலும் அதில் ஒரு தடுமாற்றமும் வேண்டும் என்பதை அத்தனை அழகாக, சட்டையைப் பட்டும் படாமல் பிடித்து கேள்வி கேட்டு அழுது கொண்டே ஆத்திரத்தைக் காட்டும் அந்தக் காட்சிக்கு கலங்காத கண்களே இருக்காது.

அதேபோல், இளையராஜா பாடிய பாடல்கள் சரியாக பொருந்தக் கூடிய நடிகர் என்றால் அது கார்த்திக் என்று உறுதியாக சொல்லலாம். “தெய்வ வாக்கு” படத்தில் வரும், “வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்…” பாடலாகட்டும்…”தர்மபத்தினி” படத்தில் வரும் “நான் தேடும் செவ்வந்திப் பூவிது” பாடலாகட்டும்…. “பகவதிபுரம் ரயில்வே கேட்” படத்தில் வரும்… “செவ்வரளி தோட்டத்துல உன்ன நினைச்சேன்….” பாடலாகட்டும்….இன்னும் இன்னும் நிறைய பாடல்கள் அப்படி கனக்கச்சிதமாகப் பொருந்தும்.

அதில் ஒரு கனத்த சோகம் ஒளிந்திருப்பதை ஆரவாரமின்றி அசை போடுவது தனித்த மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும். இப்படி.. தனது நடிப்பின் பயணத்தில் காலத்தின் சுவடுகளாக நவரசங்களை தெளித்து வந்த கார்த்திக் போன்ற நடிகர்களுக்கு நவரச நாயகர்களுக்கு வயதாவதைத்தான் பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல என்ற நீலாம்பரியின் டைலாக் படையப்பா ரஜினிக்கு அடுத்தபடியாக நடிகர் கார்த்திகிற்கு மட்டும்தான் பொருந்தும். ஸ்டைலிஷ் தமிழனின் நடிப்பை இன்றும் தமிழ் திரையுலகம் கொண்டாடுகிறது..