“ஓ பேபி”-திரைவிமர்சனம்!
சுரேஷ் புரொடக்ஷன் தயாரிப்பில் சமந்தா, லக்ஷ்மி , நாக சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஓ பேபி!. இளவயதிலேயே விதவையான , வாழ்வில் துன்பங்களை மட்டுமே அனுபவித்து, மகன் ஒருவர் மட்டுமே உலகமென வாழ்பவர் பேபி.
ஒரு மாயசக்தியினால் அவர் 24 வயது இளம் பெண்ணாக மாற்றமடைகிறார். அதன் பின் நிகழ்பனவற்றை அதகளமாக சொல்லியிருக்கும் படமே ஓ பேபி. படத்துக்கு ஆகப் பெரும் பலம் சமந்தா. 70 வயது மனநிலையுடன் கூடிய 24 வயது பெண்ணாக பேச்சு, நடை, உடை, பாவணை என அசரடிக்கிறார்.
படத்தில் 70 வயது பேபியாக லக்ஷ்மி. தனது மகன் மீதான அதீத பாசத்தால் தனது மருமகளை பகைத்து கொண்டு உடைந்து அழுவது, தனது நண்பன் ராஜேந்திர பிரசாத்தை கலாய்ப்பது என முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஒரு காட்சியில் கல்யாணம் பற்றி கேட்கும் நாக சூர்யாவிடம் என் பையனுக்கு கல்யாணமாகி அவன் பசங்க கல்யாண வயசுக்கு வந்துட்டாங்க என்று உலறி பின்பு அதனை சமாளிக்கும் இடம் ரகளை. இப்படி படம் முழுக்க சுவாரசியமான காட்சகளால் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் நந்தினி ரெட்டி.
சிறப்பான பின்னணி இசை மற்றும் பாடல்கள் என படத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயர். ரிச்சர்டு பிரசாத்தின் ஒளிப்பதிவு தரம்.
முதுமை பருவம் பற்றிய புரிதலை இந்த படம் வழங்கும். குறிப்பாக மனித வாழ்க்கையில் ஒவ்வொரு வயதுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதை அந்தந்த மனநிலையுடன் கொண்டாட்டத்துடன் அணுக வேண்டும் என்பதை சுவாரஸியமாக சொல்லியிருக்கும் படம் தான் ஓ பேபி.
துறுதுறு சமந்தாவின் நடிப்பு, படம் முழுக்க வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் என ஓ பேபி ஒரு ஃபீல் குட் எண்டர்டெயினர்.