கிருஷ்ணா நடிப்பில் வெளியான கழுகு : 2 ஓர் பார்வை!!

1272

கழுகு – 2

காதல், களவு, காட்டு விலங்குகள்… இவற்றுக்கு மத்தியில் கதை..
கொடைக்கானலை ஒட்டிய காட்டுப்பகுதியில் மரம் எடுக்கும் கான்ட்ராக்ட்டை எடுக்கிறார் ஒரு லோக்கல் புள்ளி. ஆனால் அங்கே செந்நாய்கள் தொல்லை. செந்நாய்களைச் சமாளிக்கவும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும் தேனியில் சின்னச் சின்னதாகத் திருட்டு வேலைகள் செய்யும் கிருஷ்ணாவையும் காளி வெங்கட்டையும் ‘வேட்டைக்காரர்கள்’ எனத் தவறாக நினைத்து, காட்டுக்குள் அழைத்துப் போகிறார் மேனேஜர் எம்.எஸ்.பாஸ்கர். அங்கே கிருஷ்ணா பிந்து மாதவியைப் பார்க்க, காதல் பிறக்க, வில்லன் புதையலைப் பார்க்க, ஆசை பிறக்க, இயக்குநர் ஸ்க்ரிப்ட் நீளம் பார்க்க… இன்னும் சில கிளைக்கதைகள் பிறக்க, எல்லாம் முட்டி மோதி ஆக்ஸிடென்ட் ஆவதுதான் மீதிக்கதை.

கிருஷ்ணாவுக்கு அப்பாவி வேடம் பொருந்துகிறதுதான். ஆனால் எத்தனை படங்களுக்கு அதையே செய்து கொண்டிருப்பார் எனத் தெரியவில்லை. போன நூற்றாண்டோடு போய்விட்ட, ‘மாமா… எங்க இருக்கீங்க?’ டைப் கதாபாத்திரம் பிந்துமாதவிக்கு! காளிவெங்கட் காமெடிகளுக்கு செந்நாய்களே பரவாயில்லை.

எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷ் பெராடி போன்றவர்கள் எல்லாம் காட்டுப்பாதையில் கடந்துபோகும் செடிகளைப்போல சட்டெனக் காணாமல்போகிறார்கள். இசை யுவன் என டைட்டில் கார்டில் பார்த்தால் திடுக்கென இருக்கிறது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் அவரின் சாயல் கொஞ்சமும் இல்லை. மலையும் பனியும் சேர்ந்து ஒளிப்பதிவாளரைக் காப்பாற்றுகின்றன.

‘என்ன சாப்பிட்ட?’ – ‘தயிர் சாதம்’ – ‘ஊறுகாயைப் பிசைஞ்சு சாப்பிட்டிருக்கலாம்ல!’ – ‘ஓ… தயிர்சாதத்துக்கு ஊறுகாய் தொட்டுக்குவாங்களா?’ – இப்படித்தான் இருக்கின்றன வசனங்கள்! ஓவர்லாப்பில் செல்லும் வசனங்கள் மட்டுமே பெளண்டடு ஸ்க்ரிப்ட்டில் முக்கால்வாசி வரும்போல! கடைசிப் பத்து நிமிடங்கள் மட்டுமே விறுவிறுவென இருக்கின்றன.

யாரிடமும் விசாரிக்காமலா வேட்டைக்காரர்களைத் தேர்ந்தெடுப்பார் எம்.எஸ்.பாஸ்கர், துப்பாக்கியைப் பறிகொடுத்த போலீஸ்காரர்கள் ஏன் கிருஷ்ணாவைத் தேடவில்லை, தேசிய அரசியல் பிரபலம் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் என்ன ஆனது, முதுமக்கள் தாழியில் எப்படித் தங்கப்புதையல், கொடைக்கானலுக்கு எம்.எல்.ஏ-வே கிடையாதே? இப்படிப் படம் முழுக்க ஏகப்பட்ட கேள்விகள் அந்தரத்தில் தொங்குகின்றன. எங்கேயோ ஆரம்பித்து எங்கெங்கோ பறக்கிறது இந்தக் கழுகு.