க்ளாமர் இமேஜ் பத்தி கவலைப்படலை வில்லி விசித்ரா!!

1233

விசித்ரா

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் சீரியலில் கமிட் ஆகியுள்ளார் நடிகை விசித்ரா.நடிகை விசித்ராவை நினைவிருக்கிறதா? கவர்ச்சி, குத்துப்பாட்டு எனத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி ‘ரசிகன்’, ‘முத்து’, ‘வீரா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர். தொடர்ந்து குணச்சித்திர நடிகையாகவும், ஒருகட்டத்தில் சீரியல்களிலும் நடித்தார். திருமணமாகி கணவருடன் மைசூரில் செட்டிலானவர், 18 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தமிழ் சீரியலுக்கு வந்திருக்கிறார். இவர் நடிக்கும் சீரியல் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் வில்லியாக நடிக்க இருக்கிறார். முதல் கட்டமாகச் சென்னையிலும், தொடர்ந்து தேனி பகுதியிலும் ஷூட்டிங் நடைபெறுகிறதாம். சென்னைக்கு வந்திருந்தவரிடம் பேசினோம்.

“சினிமாவுக்கு வர்ற எல்லாருக்குமே ஹீரோயின் ஆகணும்கிற ஆசை இருக்கத்தான் செய்யும். நான் மட்டும் விதிவிலக்கா இருப்பேனா? ஆனா குத்துப்பாட்டுக்கு ஆடுறவங்க; கவர்ச்சி நடிகைங்கிற அடையாளம்தான் எனக்கு முதல்ல கிடைச்சது. அதுக்காகப் பெரிசா வருத்தப்படலை. ஏன்னா, அன்னைக்கு கவர்ச்சி நடிகைகளில் விஜய் படத்துல இருந்து ரஜினி படம் வரைக்கும் எல்லா நடிகர்களின் படங்களிலும் வந்தவங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அதுலேயும் என்னை ரஜினி சாரே தன்னோட ஒரு படத்துக்கு ரெகமெண்டு பண்ணினார். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், கவுண்டமணினு பெரிய பெரிய ஆளுங்களோட வொர்க் பண்ணிட்டேன்.

நான் எடுத்துக்கிட்ட 18 வருஷம்கிறது பெரிய இடைவெளிதான். ’கல்யாணத்துக்குப் பிறகு நடிப்போமா இல்லையா’ங்கிற கேள்வி அன்னைக்கு எனக்குள்ளும் இருந்தது. அதுக்குப் பதில் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடியே மும்பை, புனேனு பல இடங்களுக்கு மாறியிருந்தேன்; கணவரோட வேலை அப்படி. தொடர்ந்து குழந்தைகள். மூணு பேரையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்துகிடுச்சு.

இதுக்கிடையில பொருளாதார ரீதியா உதவும்னு தொடங்கின ஹோட்டல் பிசினஸ் ஒருபுறம். இவ்வளவுக்கு மத்தியிலும் ‘சினிமாவிலோ, சீரியலிலோ மறுபடியும் நடிப்பேன்’னு மட்டும் ஒரு உள்ளுணர்வு சொல்லிட்டே இருந்தது. நான் சைக்காலஜி படிச்சவள். அதை வச்சு சொல்றேன், நம்முடைய ஆழ் மனசு ஒரு விஷயத்தை நடக்கற மாதிரியே நினைக்குதுன்னா, ஒருநாள் அந்த விஷயம் நிச்சயம் நடந்திடும். இதோ இப்ப கமிட் ஆகிட்டேனே! இனி தினமும் எல்லாரையும் சந்திக்கப் போறேன்’’ – உற்சாகமாகச் சொன்னவரிடம், இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகான ஷூட்டிங் அனுபவம் குறித்துக் கேட்டோம்.

‘’சினிமாவுல அறிமுகமானப்போ 18 வயசுகூட ஆகலை. பெரிசா சினிமா பின்னணி இல்லாத, அப்பா கவர்மென்ட்ல வேலை பார்த்த குடும்பம் எங்களோடது. அதனால இயல்பாவே ஒரு பயம் இருந்தது. ஒருவழியா அதையெல்லாம் கடந்து ரஜினி சார் படம் வரைக்கும் நடிச்சுட்டேன்.

ஆனா இன்னைக்கு சீரியலுக்கு கிடைக்கிற வரவேற்பு உண்மையிலேயே வியக்க வைக்குது. சீரியல் நடிகர் நடிகைகளைக் கேரக்டர் பெயர்லயே கூப்பிடறதும், அவங்களை தங்களோட வீட்டுல ஒருவராவே பார்க்கறதுமா, ஆச்சர்யமா இருக்கு. அந்த வகையில கவர்ச்சி நடிகை விசித்ராங்கிறது என்னோட பழைய அடையாளமா இருக்கலாம்.

ஆனா நானும் இனி உங்க வீட்டுல ஒருத்தியா இருக்கப் போறேன்னு நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு. இப்போ, உடன் நடிக்கிறவங்களில் சிலர் என்னோட படங்கள் வெளியான நாள்கள்ல ஸ்கூல்ல படிச்சவங்களாம். அவங்களுக்கெல்லாம் எங்கிட்ட வந்து பேச ஆசை. ஆனா ஏனோ தயங்கவும் செய்றாங்க. ஷூட்டிங் இப்பதானே தொடங்கியிருக்கு, போகப்போக கூச்சம், தயக்கமெல்லாம் சரியாகி தெளிவாகிடுவாங்கன்னு நம்பறேன்’’ எனச் சிரிக்கிறார் விசித்ரா.