சுற்றுலா சென்ற நடிகை நமீதாவின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய நிலையில் அவர்களுடன் நமீதா கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக கட்சியில் இணைந்த நடிகை நமீதா, கடந்த தேர்தலின்போது நட்சத்திர பேச்சாளராக வாக்கு சேகரித்தார். ஆனால், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கி உள்ளார்.
இந்நிலையில், அவரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் நிறுத்தினர். அந்த காரில் நடிகை நமீதா மற்றும் அவருடைய கணவர் உட்பட 4 பேர் இருந்தனர்.
இதனையடுத்து, அந்த காரை சோதனை செய்ய அதிகாரிகள் முயன்றனர். இதற்கு நமீதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தான், வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த சோதனையின் போது அவர்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம், நகை எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.