நடிகை சுஜாதா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சுஜாதா. இலங்கையின் காலியில் கடந்த 1952ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சுஜாதா பிறந்தார்.
இளம் வயதிலேயே இந்தியாவின் கேரள மாநிலத்துக்கு வந்து செட்டில் ஆன சுஜாதா அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சினிமா மீது அவர் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தும் அவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்தன.
1971-ம் ஆண்டு தபஷ்வினி என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சுஜாதா எர்ணாகுளம் ஜங்ஷன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் கே.பாலசந்தர் அவரை பார்த்தார்.
சுஜாதாவின் நடிப்பு, பாலசந்தரைக் கவர்ந்த நிலையில் அவரின் அவள் ஒரு தொடர்கதை படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சுஜாதா.
தமிழில் அது அவரின் முதல் படம் என்பதை நம்பமுடியாத அளவில் சுஜாதாவின் நடிப்பு பிரமிக்க வைத்தது. பின்னர் பல திரைப்படங்களில் நடித்த சுஜாதா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
சிவாஜி கணேசன், முத்துராமன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஸ்வரராவ், சோபன் பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
முன்னணி நடிகையாக இருந்தபோது, ஜெயகர் என்பவரைக் காதலித்துக் கரம்பித்தார். திருமண பந்தத்தின் மூலம் சுஜாதாவைச் சுற்றி ஒரு வேலி உண்டாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், இவரிடம் கதை சொல்லவும், கால்ஷீட் பெறவும் ஏன் அவரை சந்திப்பதுமே பெரிய சவாலாக இருந்தது.
அதற்குச் சுஜாதா இடம் கொடுத்தாரா என்பதும் தெரியவில்லை. இருப்பினும், சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.
சுஜாதாவின் கடைசித் தமிழ்த் திரைப்படம், அஜித்துடன் நடித்த வரலாறு. பின்னர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர், 2011-ம் ஆண்டு காலமானார்.
அப்போது தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் தருணம். பிரசாரம், தேர்தல், ஆட்சி மாற்றம் என அப்போதைய அரசியல் சூழல்களால் சுஜாதாவின் மரணமும் பலருக்கும் அறியா கதையாகவே முடிந்துவிட்டது தான் பெரும் சோகம்.