செல்வராகவன்………
ஜீனியஸ் இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்படும் செல்வராகவன் சமீபகாலமாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் தளபதி 65 படத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாக வலைப்பேச்சு நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உருவாகும் படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்றால் அது விஜய் நடிக்கும் தளபதி 65 படம்தான். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏகப்பட்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
மேலும் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் தளபதி 65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் தளபதி 65 படத்தில் விடிவி கணேஷ், யோகி பாபு போன்ற எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஆனால் தளபதி 65 படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார்கள் என்பது மட்டும் சஸ்பென்ஸாக இருந்தது.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வதந்தி அரசல் புரசலாக கிளம்பியுள்ளது.
சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் செல்வராகவன் தளபதி 65 படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். மேலும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் வலைப்பேச்சு நண்பர்கள் தங்களது யூடியூப் தளத்தில் பகிர்ந்து கொண்டனர். விஜய்க்கு வில்லன் செல்வராகவன் என்று சொல்லும்போதே அந்த படம் எப்படி இருக்கப் போகிறதோ? என்ற கற்பனை ரசிகர்கள் மனதுக்குள் வட்டமிட ஆரம்பித்துள்ளது.