நயன்தாரா…
தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா, கடந்த செவ்வாய்க்கிழமை தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
அதில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக நடிகை நயன்தாராவை கிண்டலடித்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் ஊசி இருப்பது தெரிகிறது. இதன்மூலம் நயன்தாராவின் தடுப்பூசி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.