தமிழர்கள் போராடி வருகிறோம்.. அக்கறை இருந்தால் இதை செய்யுங்கள் : வைரலாகும் கமல்ஹாசன் பதிவு!!

1014

வைரலாகும் கமல்ஹாசன் பதிவு

பேனர் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சாலையில் வைத்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது விழுந்ததன் காரணமாக அவர் லொறி மோதி பலியானார்.இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்கக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும், திரைப்பட நடிகர்களும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஆகியோர் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள இந்திய – சீன சந்திப்புக்கு வரவுள்ள நிலையில் அவர்களை வரவேற்று பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சுபஸ்ரீயின் இழப்பிலிருந்து மீண்டு வர தமிழர்களும், தமிழ்நாடும் போராடி வருகிறோம்.இந்த நேரத்தில் தமிழக அரசு உங்களுக்கு பேனர் வைப்பது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்த பேனர் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு நீங்கள் முன்னோடியாக செயல்பட்டால், அது உங்களுக்கு தமிழர்கள் மீதான அக்கறையை பிரதிபலிக்கும், மேலும் அதுவே உங்களுக்கு பெரிய விளம்பரத்தை கொடுக்கும் என பதிவிட்டுள்ளார்.