முதல் முறையாக மனம் திறந்த நடிகர் பார்த்திபன்
சினிமாவில் கொடிகட்டி பறந்த போதே வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர் நடிகை சீதா.
ஆண்பாவம் படத்தில் அறிமுகமான சீதா, புதிய பாதை என்ற படத்தில் பார்த்திபனுடன் சேர்ந்து நடித்த போது காதல் வயப்பட்டார். இவர்களது காதல் வீட்டுக்கு தெரிந்து எதிர்ப்பு எழ, பெற்றோரை எதிர்த்து ஓடிவந்து பார்த்திபனை கரம்பிடித்தார்.
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வெடித்தது. இதனால் இருவரும் சமரசமாக விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.
இதுகுறித்து பார்த்திபன் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னை பொறுத்த வரையில் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணத்தை விட காதல் திருமணம் முழுக்க முழுக்க சென்டிமெண்டுகள், எமோஷனல் நிறைந்தது.
வாழ்க்கையில் சின்ன சின்ன மாறுபாடுகள், வேறுபாடுகள் வரத்தான் செய்யும், இந்த சண்டைகள் மணமுறிவு என்ற நிலைக்கு சென்றுவிட்டால் பிரிவது கூட காதலில் இணைந்தது தான்.
அனைத்தையும் சகித்துக் கொண்டு கடைசிவரை வாழ வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை, இந்த வாழ்க்கை எனக்கு ஒருமுறை தான், அந்த பெண்ணுக்கும் அப்படித்தான்.
வருத்தங்களுடன் வாழ்வதற்கு பதிலாக பிரிந்து சந்தோஷமாக வாழலாம், இதுவும் கூட காதல் தான் என தெரிவித்துள்ளார்.மேலும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைக்கு தங்களால் ஆன பங்களிப்பை இருவரும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அழகும் நடிப்பும் ஒருங்கே அமைந்த சீதா, ஹோம்லி கேரக்டர்களில் நடித்துப் புகழ்பெற்றவர். நான்கரை ஆண்டுகள் மட்டுமே கதாநாயகியாக நடித்தாலும், மக்களின் அன்பை அதிகம் பெற்றார். வாழ்க்கையில் இவர் பயணித்த தடங்கள் பலவும் திருப்பங்கள் நிறைந்தவை. இன்றும் நடிப்பைத் தொடரும் சீதா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.
“என் பூர்வீகம், சென்னைதான். எப்போதும் எங்க வீட்டில் உறவினர் கள் உட்பட 25 பேர் இருப்பாங்க. எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுறதே அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதில் ஒரே பெண் குழந்தை யான என்னை, கஷ்டம் தெரியாம செல்லமா வளர்த்தாங்க. அமைதி மற்றும் வெகுளித்தனம்கொண்ட நான், யாராச்சும் அதட்டினாக்கூட அழுதுடுவேன். அப்பா மோகன் பாபு, தமிழ் சினிமாவில் கேரக்டர் ரோல்களில் நடிச்சிட்டிருந்தார். வீட்டில் சினிமா பத்தி பேச மாட்டோம். சினிமா தியேட்டருக்கும் கூட்டிட்டுப்போக மாட்டாங்க. எனக்குப் பிடிச்ச மசால் தோசை மற்றும் ரோஸ் மில்க் சாப்பிட மட்டும் எப்பவாச்சும் அவுட்டிங் கூட்டிட்டுப்போவாங்க. நல்லா படிப்பேன். டாக்டராகணும்னு ஆசைப்பட்டேன்.
ஒரு கல்யாண நிகழ்ச்சியில் நான் கலந்துகிட்டதை வீடியோ கேசட்டில் பார்த்த இயக்குநர் பாண்டியராஜன் சார், என் அப்பா மூலமா என்னை நடிக்கக் கேட்டார். அப்போ பத்தாவது படிச்சுகிட்டிருந்த எனக்கு நடிக்க விருப்பமில்லை. ‘வர்ற வாய்ப்பை ஏன் வேண்டாம்னு சொல்லணும்? இந்த ஒரு படத்தில் மட்டும் நடி. பிறகு, உன் விருப்பம்’னு அப்பா சொன்னார். ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்த பாண்டிய ராஜன் சார், ‘நீ பயப்படாம நடிக்கலாம். உன்னை யாரும் தொட்டுப் பேச மாட்டாங்க. உனக்கு எந்தத் தொந்தரவும் இல்லாம நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னார். வெளிநாட்டில் வேலை செய்துட்டிருந்த எங்கம்மாவும் வலியுறுத்தி னாங்க. பிறகுதான், ‘ஆண் பாவம்’ படத்துல நடிக்க சம்மதிச்சேன்…
…கல்யாணத்துக்குப் பிறகும்கூட, எனக்கு நிறைய நல்ல பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, நான் மேற்கொண்டு நடிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. அவர் விருப்பப்படி நடந்துக்கிறதுதான் சரின்னு 13 வருஷம் நடிக்காமல் இருந்தேன். நான் முழுமையா நம்பி, பெற்றோரை எதிர்த்துட்டுப் போன இல்லற வாழ்க்கையில் நிறைய மனக்கசப்புகளையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டேன். கல்யாண விஷயத்தில் நான் எடுத்த முடிவு தவறுன்னு உணர்ந்தேன். திருமணப் பந்தத்திலிருந்து இருவரும் சுமுகமா விலகி, விவாகரத்து பெற்றோம். அதுமாதிரி ஒரு நாளை யாருமே எதிர்கொள்ளக் கூடாது. அவ்வளவு அழுகை, அவ்வளவு தவிப்பு… அதன் பிறகுதான் என் பெற்றோர் வீட்டுக்கே போனேன்.
என் வாழ்க்கையை மீண்டும் பூஜ்யத்துல இருந்து தொடங்கினேன். பொருளாதார ரீதியா சிரமப்பட்டேன். எதிர்கால வாழ்க்கைக்கு சினிமா தவிர எனக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. அதனால், மீண்டும் நடிக்க முடிவெடுத்தேன். பெரிய இடைவெளிவிட்டு நடிக்க ஆரம்பிச்சது, சிரமமா இருந்துச்சு. மன ரீதியா கொஞ்சம் ரிலாக்ஸ்டா நடிக்கணும்னு, முதலில் ‘வேலன்’ சீரியல்ல நடிச்சேன். அதேநேரம், சினிமாவிலும் நடிக்க ஆரம்பிச்சு, ‘மாறன்’, ‘மதுர’, ‘வியாபாரி’ உட்பட பல படங்கள்ல குணச்சித்திர ரோல்களில் நடிச்சேன். மலையாளம் உட்பட நாலு தென்னிந்திய மொழிகளிலும் திருப்தியான படங்கள் அமைஞ்சது. மீண்டும் சினிமாதான் என்னை வளர்த்துவிட்டது. இதுவரை 200 படங்களுக்கு மேல் நடிச்சிருப்பேன்.
என் வாழ்க்கையில எப்போதும் யார்கிட்டயும் நான் எந்த உதவியும் கேட்டு நின்னதில்லை. என் குடும்ப வாழ்க்கை பற்றி சில தவறான வதந்திகள் இணையதளத்தில் வெளியாகிட்டே இருக்குது. அது எனக்கு பெரிய வருத்தத்தை உண்டாக்குது. யாரைப் பற்றி இருந்தாலும், உறுதிசெய்யப்படாத தகவல்களை பகிராமல் இருப்பது தான் மனிதநேயம். பிரிந்த திருமணப் பந்தத்தில், இனி இணைந்து வாழும் எண்ணமே எனக்கில்லை. இவ்வளவு நாள் வாழ்ந்ததுபோல, இனியும் தனியாகவே வாழ விரும்புறேன். இரண்டு மகள்களின் கல்யாணத்தையும் நல்லபடியா நடத்தியாச்சு. பையனுக்கு நல்ல வாழ்க்கை அமையணும் என்கிற ஆசை மட்டும்தான் எனக்குப் பாக்கியிருக்கு!”