மாபெரும் கலைஞன் வடிவேலு
தமிழ்சினிமா அகராதியில் இருந்து தவிர்க்கவே முடியாத ஒரு மாபெரும் நகைச்சுவை கலைஞன் வடிவேலு.மதுரையை சேர்ந்த வடிவேலு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இன்று அவரின் பிறந்தாள் என சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் தனக்கு செப்டம்பர் 12ஆம் திகதி தான் பிறந்தநாள் என வடிவேலு வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இவரின் தந்தை பெயர் நடராசன், தாய் பெயர் சரோஜினி அம்மாள்.வடிவேலு தனது சிறுவயதிலிருந்தே பள்ளிக்கூடம் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு நாடகங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து அசத்துவாராம்.
இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக வடிவேலுவின் தந்தை மரணமடைய அவர் குடும்பம் வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டது.இதன்பின்னர் மதுரையில் புகைப்படங்களுக்கு பிரேம் மாட்டும் கடையில் வடிவேலு வேலைக்கு சேர்ந்தார்.
இந்த சூழலில் வடிவேலு ஊருக்கு பிரபல நடிகரும், இயக்குனரான ராஜ்கிரண் சென்ற போது வடிவேலுக்கு அவர் அறிமுகம் கிடைத்தது.
இதையடுத்து சென்னையில் உள்ள ராஜ்கிரண் வீடு மற்றும் அலுவலகத்தில் வடிவேலு பணிபுரிந்த நிலையில் அவர் நடிப்பு திறமையை பார்த்து தனது என் ராசாவின் மனசிலே படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பளித்தார்.
அதன்பின்னர் கவுண்டமணி, செந்திலுடன் சிறுசிறு நகைச்சுவை வேடங்களில் நடித்த வடிவேலுவுக்கு பின்னர் தனியாக நகைச்சுவை நடிகராக படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.
இதையடுத்து விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை காட்டிய வடிவேலு தமிழ் திரையுலகில் நம்பர் 1 நகைச்சுவை நடிகராக ஆனார்.இவர் எழுதி நடித்த காமெடி காட்சிகளுக்காகவே ஓடிய திரைப்படங்கள் ஏராளம்.
கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் மீம்ஸ் வாயிலாக சமூக வலைதளங்களிலும் வடிவேலுவின் ராஜ்ஜியம் தான் தொடர்கிறது.
வடிவேலுவுக்கு விசாலாட்சி என்ற மனைவியும், கன்னிகாபரமேஷ்வரி, கார்த்திகா, கலைவாணி என்ற மூன்று மகள்களும், சுப்ரமணியன் என்ற மகனும் உள்ளனர்.
தனது ஆரம்பகால ஏழ்மையை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்ரமணியனுக்கு கூரை வீட்டில் வசிக்கும் ஏழை பெண்ணை திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.