மறக்க முடியாத ஜில் ஜில் ரமாமணி : ஆச்சி மனோரமா!!

1955

ஆச்சி மனோரமா

ஆச்சி என்று இன்றும் மரியாதையோடு அனைவராலும் அழைக்கப்படும் மனோரமா ஆச்சியின் இழப்பு திரையுலகையே கலங்க வைத்தது. அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு. தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளை தனது திரையுலக வாழ்வில் பெற்றவர்.

மேலும் 1000 படங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்ததால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. அவரது நான்காவது நினைவு தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அவரைப்பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம்.

மன்னார்குடியில் இருந்து வந்து மாபெரும் கலைஞராக தன்னை மெருகேற்றிக்கொண்டு, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையே அண்ணாந்து பார்க்க வைத்து கொண்டாடிய ஒரு ஈடில்லா பெண்மணி ஆச்சி மனோரமா. தமிழ் மட்டுமே பேச தெரிந்தாலும், தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் என ஆறு மொழி திரைப்படங்களில் நடித்தவர்.

குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை தான் அவர் சினிமா உலகத்திற்குள் வர காரணமாய் இருந்தது. 5 வயதிலேயே நாடக மேடை ஏறிய சிறுமி கோபி சாந்தா, தன்னால் முடிந்த அளவிற்கு குடும்பத்தின் வறுமையை போக்குவோமென்ற நல்லெண்ணத்தில் நடிக்க தொடங்கினார். கோபி சாந்தாவிற்கு மனோரமா என்று பெயர் சூட்டியவர் நாடக இயக்குனர் திருவேங்கடம்.

அப்படி தொடங்கிய மனோராவின் நாடக கலை பயணம், கவிஞர் கண்ணதாசன் மூலம் சினிமா துறையில் 1958ஆம் ஆண்டில் மாலையிட்ட மங்கை திரைப்படம் மூலம் தொடங்கப்பட்டது. அறிமுகமான முதல் படத்திலேயே நகைச்சுவையில் கலக்கியவர் மனோரமா.

கோபி சாந்தா, மனோரமாவாக உருமாறி சுமார் 55 ஆண்டுகளாக யாராலும் நெருங்கக் கூட முடியாத அளவிற்கு சினிமாவையே உயிர் மூச்சாக சுவாசித்து இறக்கும் தருவாய் வரையிலும், நடிகையாகவே வாழ்ந்து புகழின் உச்சியில் இருந்தவர். அறிஞர் அண்ணாதுரை மற்றும் கலைஞர் கருணாநிதியோடு நாடகங்களில் நடித்துள்ளார்.

மேலும் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் உடன் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இப்படி ஐந்து முதல்வர்களோடு இணைந்து நடித்த பெருமை மனோரமாவை சேரும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார் ஆச்சி மனோரமா.

இவர் நாடகக் கலைஞர்களையும், சினிமா கலைஞர்களையும் எந்த வேறுபாடுமின்றி ஒரே மாதிரி தான் பாவிப்பார். நகைச்சுவை நடிகர் நாகேஷ் உடன் இணைந்து இவர் நடித்த பல நகைச்சுவை காட்சிகள் இன்றும் நம் உள்ளங்களில் பசுமையாய் பூத்து குலுங்குகிறது. நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக யதார்த்தமாக நடித்தவர்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் இன்றும் நம் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. சின்னத்தம்பி, சின்ன கவுண்டர் என பல திரைப்படங்களில் அவரது நடிப்பு நம்மை நெகிழ வைத்துள்ளது. மனைவி, அம்மா, மாமியார், பாட்டி என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது.

கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேலு, விவேக் என அனைத்து நகைச்சுவை நடிகர்களோடும் இணைந்து நடிக்கும் போதும் அவர்களது காம்பினேஷன் பிரமாதமாக இருக்கும். இவருடன் நடிக்காத கதாநாயகர்களே இல்லை. தனது தனிப்பட்ட வாழ்வில் பல ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் என பல இன்னல்களை சந்தித்தாலும் அவருடன் நடித்த ஒவ்வொரு கலைஞர்களையும் அவரது சொந்த உறவுகளாகவே எண்ணியவர்.

நடிப்பு மட்டுமின்றி பல திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியுள்ளார். டில்லிக்கு ராஜனாலும் பாட்டி சொல்ல தட்டாதே என இவர் பாடிய பாடல் மிகவும் பிரபலம். நாடகங்களில் உடன் நடித்த எஸ்.எம்.ராமநாதன் என்பவரை பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது கணவர் இவரை விட்டு விலகி மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளை தனது திரையுலக வாழ்வில் பெற்றவர். மேலும் 1000 படங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்ததால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நாடங்களில் நடிப்பதை மிகவும் பெருமையாக கருதும் ஒரு மகா கலைஞர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஆச்சி மனோரமாவும் அண்ணன் தங்கையாகவே வாழ்ந்தார்கள்.

ஆச்சி என்று இன்றும் மரியாதையோடு அனைவராலும் அழைக்கப்படும் மனோரமா ஆச்சியின் இழப்பு திரையுலகையே கலங்க வைத்தது. அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு. அவர் நம் மத்தியில் இல்லையே தவிர, அவரின் ஆசிகளும், அன்பும், திறமையும், நடிப்பும் நம்மோடு என்றும் பின்னிப்பிணைந்து தான் இருக்கும்.