மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுக்களை விட்டு விட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். கொலைகாரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
தீவிரவாதத்தில் மதத்தை கொண்டு வர வேண்டாம். நீங்கள் திரையுலகில் சிறந்த மனிதர் என்பதில் ஐயம் இல்லை, ஆனால் அரசியல் என்பது மேடை நாடகம் இல்லை.
மோசமான அரசியல்வாதிகளான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா ஆகியோரின் ஆதரவை பெற, மக்களிடம் அனுதாபத்தை பெற அழுவது போன்றவற்றை விட்டுவிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். அரசியலில் மேலும் ஒரு நடிகராகிவிடாதீர்கள்.
மேலும் மற்றொரு ட்வீட்டில் அவர் கூறுகையில், ‘வேறு ஒரு மதத்தினர் வசிக்கும் பகுதியில் இந்து மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது ஏன்?. அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தானே? இந்துக்களுக்கும் கமல் தீவிரவாதியா?, பயங்கரவாதியா? தவறான வார்த்தைகளை நியாயப்படுத்தாதீர்கள். அவரது வார்த்தை முட்டாள்தனமானது.
இந்து மதத்தை அவமதிப்பது போல கமல், கி.வீரமணி, ஸ்டாலின் ஆகிய சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இது போன்று யாரும் பேச துணிவிருந்ததில்லை. நீங்களும் இதைப் போல செய்ய வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மன்னிப்பு மன்னிக்கறவங்களோட மன்னிப்பு கேக்கறவங்க தான் பெரிய ஆளு, நல்ல மனிதர் என்று நீங்கள் என்னிடம் பலமுறை கூறி இருக்கிறீர்கள்.
இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் ஆகிவிடாது. இதில் நீங்கள் மதத்தினை உள்ளே கொண்டு வராதீர்கள். மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று மக்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள் மற்றவர்களைப் போல நீங்களும் இருப்பதை விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.