நடிகர் கமல்ஹாசன்..
கமல் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள்
கமல் : 1. கமல்ஹாசன் நடிக்க வந்தபோது அவருக்கு வயது 5. முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்தில் (1959) அவர் ஆதரவற்ற சிறுவனாக நடித்து இருந்தார். மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி தங்க பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில், அறிமுகமான முதல் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக தங்க பதக்கம் வென்றது கமல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
2. கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமல்ல. திரையுலகின் அனைத்து பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர். திரைத்துறையின் அனைத்து விஷயங்களையும் அவர் தனது கைவிரல் நுனியில் வைத்திருக்கும் வகையில் நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளார். மிகச்சிறந்த நடன கலைஞர், பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், தொழில்நுட்ப கலைஞர், ஒப்பனை கலைஞர் என்று பல அவதாரங்களை அவர் எடுத்துள்ளார்.
வேடங்களில் தனித்துவத்தை காட்டுவதற்காக அமெரிக்கா சென்று மேக்கப் துறையில் படித்து வந்தார். இதனால் மேக்கப்பின் அனைத்து அம்சங்களும் அவருக்கு அத்துபடியாக தெரியும்.
3. தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை அவர் படைத்தார். 1994-ம் ஆண்டு அவரால் இந்த சாதனை உருவாக்கப்பட்டது.
4. கமல்ஹாசன் நடிப்பில் உருவான ஆளவந்தான் படம் 2001-ம் ஆண்டு இந்தியில் அபய் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அந்த இந்தி படத்தை பார்த்த பிரபல ஆலிவுட் டைரக்டர் கியூன்டின் டரன்டினோ பிரமித்து போனார். ஆளவந்தான் படத்தில் வரும் காட்சிகள் போல இதுவரை எந்த படத்திலும் பார்த்தது இல்லை என்று மனம் திறந்து பாராட்டினார். 2003-ம் ஆண்டு அவர் இயக்கிய கில்பில் (வால்யூம்-1) என்ற படத்தில் ஆளவந்தான் போன்று அவர் காட்சிகளை அமைத்தார். தமிழ் படத்தின் காட்சிகளை பார்த்து ஆலிவுட் இயக்குனர் ஒருவர் அதே போன்று வைத்தது இதுவே முதல் தடவையாகும்.
5. கமல்ஹாசன் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான “நாயகன்” படம் உலக தமிழர்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த படம் மக்கள் மனதில் பதிந்த படம் என்று டைம்மேக்கசின் புகழாரம் சூட்டியது. 1997-ம் ஆண்டு உலகின் சிறந்த நூறு திரைப்படங்களை டைம் இதழ் பட்டியலிட்டது. அதில் கமல்ஹாசனின் “நாயகன்” படம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
6. பொதுவாக நடிகர்-நடிகைகளுக்கு இரண்டு அல்லது மூன்று மொழிகள் தெரிந்து இருக்கும். ஆனால் கமல்ஹாசனுக்கு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் சரளமாக பேச தெரியும். இதில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் அவர் நடித்த படங்கள் வெளியாகி வெள்ளி விழாக்கள் கொண்டாடி உள்ளன. இந்திய நடிகர்களில் யார் படமும் இப்படி 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது இல்லை. அந்த வகையில் கமல்ஹாசனின் சாதனை இதுவரை எந்த நடிகராலும் முறியடிக்க முடியாத தேசிய சாதனையாக உள்ளது.
7. கமல்ஹாசன் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான தசாவதாரம் படத்தில் அவர் 10 வேடங்களில் நடித்து இருந்தார். 10 மாறுபட்ட வேடங்களில் கமல் நடித்தது உலக அளவில் பேசப்பட்டது. இன்று வரை அந்த சாதனையை எந்த நடிகராலும் உடைக்க முடியவில்லை.
8. நடிகர்கள் பொதுவாக உடல் உறுப்பு தானம் செய்வது இல்லை. ஆனால் கமல்ஹாசன் உடல் உறுப்பு தானத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது மறைவுக்கு பிறகு தனது உடல் உறுப்புகளை சென்னை மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
9. நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்பதில் கமல்ஹாசனுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. தான் மட்டும் அந்த பணிகளை செய்யாமல் தனது ரசிகர்களையும் நற்பணிகளை செய்ய வைத்த தனி சிறப்பு அவருக்கு உண்டு. தனது ரசிகர்கள் தங்களால் முடிந்ததை ஏழை-எளியவர்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழ் நடிகர்களில் ரசிகர்களை நற்பணியில் இறக்கிய முதல் நடிகர் கமல்ஹாசன்தான்.
10. நடிப்புக்காக கமல்ஹாசனுக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள், பட்டங்கள், பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகருக்கான விருதை அவர் ஏராளமான முறை பெற்றுள்ளார். பிலிம்பேர் பத்திரிகை மட்டும் 19 தடவை கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி உள்ளது. 19-வது தடவை அவர் விருது பெற்ற பிறகு, “இனி வேறு இளம் நடிகர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதை தாருங்கள். எதிர்காலத்தில் எனக்கு மீண்டும் மீண்டும் அந்த விருதை தர வேண்டாம்” என்று அன்போடு கேட்டுக் கொண்டார்.