நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு முக்கிய காரணம் பிகில் படத்தின் வசூல் தான் என்று கூறப்பட்ட நிலையில், அது தொடர்பான வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நேற்று திடீரென்று நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்றும் விஜயிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது விசாரணை பிகில் படத்தில் தான் எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
சுமார் 18 மணி நேர விசாரணையை தொடர்ந்து விஜய் மற்றும் சங்கீதாவிடம் வாக்குமூலம் பெற்று வரும் நிலையில், இந்த திடீர் விசாரணை மற்றும் சோதனைக்கு காரணம் பிகில் படத்தின் வசூல் தான் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் பிகில் படம் 300 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ததாக கூறி, விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தகவல்களை பரப்பினார். அது தான் முக்கிய காரணம் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது,
இதையடுத்து சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்தப்பட்டு வரும் சோதனையில் 77கோடி ரூபாய் தற்போது வரை சிக்கியுள்ளது.
மேலும் விஜய் வீட்டில் இருந்து எந்த ஒரு பணமும் கைப்பற்றபடவில்லை எனவும், அவரிடம் பிகில் படத்தின் சம்பளத்தை பற்றியே அதிகாரிகள் கேட்டுள்ளதாகவும், அதற்கு விஜய் அந்த படத்தில் மூலம் கிடைத்த பணத்தை வைத்து அசையா சொத்துக்கள் வாங்கியதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இது குறித்து வருமானவரி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5ம் திகதி தமிழ் திரையுலகில் இருக்கும் முக்கிய நான்கு நபர்களான, படத்தின் தயாரிப்பாளர், நடிகர், சினிமா பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர்கள் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று கூறப்பட்ட பிகில் திரைப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள், படம் 300 கோடிக்கு மேல் வசூல் என்று கூறப்பட்டதால், பைனான்சியரான அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு தொடர்புடைய 38 இடங்களில், வருமானவரித்துறை குழுவினர் நேற்று முதல் சோதனை நடத்தினர்.
இதில், 300கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்கள் , சொத்து பத்திரங்கள், முன் திகதியிட்ட காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் பிகில் படம் மூலம் 300 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக தெரிவித்திருந்தது. இந்த வருமானம் சரி தானா என்பதை பார்ப்பதற்காகவே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதில், படத்தின் மொத்த வசூல் 300 கோடிக்கு மேல் அதிகமாக இருப்பதை வருமான வரி துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 300 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிவிட்டு, அதன் பின் 300 கோடி ரூபாய் தான் வருமானம் என்று குறைத்து காட்டியது தற்போது அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.