தேர்தலில் சுயேச்சையாக நின்று முதல்வர் மகனையே ஜெயித்த பிரபல தமிழ்ப்பட நடிகை : குவியும் வாழ்த்துக்கள்!!

1030

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவியான நடிகை சுமலதா அபார வெற்றி பெற்றுள்ளார்.

சுமலதா தமிழில் கழுகு, முரட்டுகாளை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை, சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மண்டியா மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக மக்களவை தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின் போது மண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த நடிகை சுமலாதாவிடம் வேறு தொகுதி ஒதுக்கி தருகிறோம் அதில் போட்டியிடுங்கள் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி பார்த்தனர். ஆனால் அதனை ஏற்காத அவர் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார்.

இதனையடுத்து மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் களமிறக்கப்பட்டார். ஆனால் உள்ளூர் காங்கிரஸார் இதனை ரசிக்கவில்லை. தங்களது முழு ஆதரவையும் நடிகை சுமலதாவிற்கே மறைமுகமாக அளித்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குமாரசாமி, ஒருகட்டத்தில் வாய்விட்டே புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் குமாரசாமி பயந்தது போலவே தற்போது மண்டியா மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே முன்னிலை வகித்த நடிகை சுமலதா, இறுதி சுற்றின் போது நிகில் கவுடாவை விட 90,000 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றியை தன் வசமாக்கியுள்ளார்.

சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற சுமலதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.