விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிந்துபாத்’. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கும் இப்படம், ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
படத்தின் தயாரிப்பாளர், ‘பாகுபலி’ பட தயாரிப்பாளருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட வேண்டிய தொகையை கொடுக்காததால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஜூன் 21 ஆம் தேதி படம் வெளியாகமல் போனது.
பிறகு இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து ‘சிந்துபாத்’ படத்தை வரும் ஜூன் 28 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு, தேதியை அறிவித்துள்ளது.
தற்போது ‘சிந்துபாத்’ 28 ஆம் தேதி வெளியாவதால், அன்றைய தினம் வெளியாக இருந்த யோகி பாபுவின் ‘தர்மபிரபு’, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ மற்றும் ‘ஜீவி’ ஆகிய படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், படத்தின் ரிலீஸ் தேதியை 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்க வேண்டும், என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், “பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்.” என்று தெரிவித்துள்ளார்